search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போகிப் பண்டிகை"

    • இந்த ஆண்டு போகி மாசுவை கட்டுப்படுத்த பழைய துணிகளையும், டயர்களையும், பொருட்களையும் எரிக்க வேண்டாம். நாங்கள் நேரடியாக பெற்றுக்கொள்கிறோம் என்று மாநகராட்சி அறிவித்தது.
    • வீடு வீடாக சென்று தூய்மை பணியாளர்கள் பழையதை சேகரித்தனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் போகிப் பண்டிகையில் பழைய பொருட்கள், டயர்களை தெருக்களில் போட்டு எரிப்பார்கள். அப்போது சிறுவர்கள் மேளம் அடித்து ஆடுவார்கள்.

    அதில் இருந்து வெளியேறும் புகை மூட்டம் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு இருக்கும். விமானங்கள் தரையிறங்க முடியாததால் திருப்பி விடப்பட்டதும் உண்டு.

    ஆனால் இந்த ஆண்டு போகி மாசுவை கட்டுப்படுத்த பழைய துணிகளையும், டயர்களையும், பொருட்களையும் எரிக்க வேண்டாம். நாங்கள் நேரடியாக பெற்றுக்கொள்கிறோம் என்று மாநகராட்சி அறிவித்தது. வீடு வீடாக சென்று தூய்மை பணியாளர்கள் பழையதை சேகரித்தனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

    கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே பழையதை எரித்தார்கள்.

    தற்போது பனிக்காலம் என்பதால் அதிகாலையில் பனிப்புகை பெருமளவில் சூழ்கிறது.

    அத்துடன் போகிப் புகையும் இணைந்ததால் பல இடங்களில் புகை மூட்டம் அதிகமாக காணப்பட்டது. எதிரே வந்த வாகனங்கள் தெரியாதபடி புகை சூழ்ந்து இருந்தது.

    வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே சாலைகளில் பயணித்தன.

    சில தெருக்களில் எரித்த பிறகு சாம்பலில் தண்ணீர் ஊற்றி எடுத்து அப்புறப்படுத்தினார்கள். இந்த அளவுக்கு விழிப்புணர்வு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. எதிர்வரும் காலங்களில் இந்த பிரச்சினைகள் முடிந்து விடும் என்கிறார்கள் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள்.

    • மழைத் தெய்வமாக உழவுத் தொழில் மரபினரால் அடையாளப்படுத்தப்படும் இந்திரனுக்குப் போகி என்னும் பெயருமுண்டு.
    • அறுவடைக்கான வேளாண்மை உற்பத்தியைப் போகம் என்னும் சொல்லால் குறிப்பதுண்டு.

    போகி பண்டிகை என்றால் பழையனவற்றை கழித்தல் என்று நினைத்து பலரும் தங்கள் வீடுகளில் உள்ள பழையப் பொருட்களை வீதியில் போட்டு தீயிட்டுக் கொளுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் போகியின் உண்மையான நோக்கம் வேறு. அதுபற்றி பார்ப்போம்...

    ஆடி மாதத்தில் தேடி விதைத்தும் நடவு செய்தும் பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து, அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் பொங்கல் வைப்பதுதான் மரபாக இருந்திருக்கிறது.

    வேளாண்மை உற்பத்திக்கும் உழவருக்கும் உறுதுணையாய் இருந்தவை மழையும் மாடுகளும்தான். அவ்வகையில், உழவுத் தொழில் மரபினரின் பொங்கல் தளுகையானது மழைக்கும் மாடுகளுக்கும்தான் முதன்மையாகப் படைக்கப்படுகிறது.

    மழையைத் தெய்வமெனத் தொழுத பிறகே பொங்கலிட்டுத் தளுகை படைத்து மகிழ்ந்திருக்கின்றனர் உழவு மரபினர். அத்தகைய மழைத் தெய்வமே போகி என்பதாகும்.

    மழைத் தெய்வமாக உழவுத் தொழில் மரபினரால் அடையாளப்படுத்தப்படும் இந்திரனுக்குப் போகி என்னும் பெயருமுண்டு. அறுவடைக்கான வேளாண்மை உற்பத்தியைப் போகம் என்னும் சொல்லால் குறிப்பதுண்டு.

    போகம் விளைவதற்கான அடிப்படை வித்தாக இருப்பது மழைதான். அதனால்தான், போகம் விளைவிக்கும் மழைத் தெய்வத்தைப் போகி என்னும் சொல்லாலும் அடையாளப்படுத்தியுள்ளனர். அதாவது, போகத்தைத் தருவதால் போகி என மழையைக் குறித்துள்ளனர்.

    வேளாண்மை விளைச்சல் தரும் மழைத் தெய்வமான போகியை- இந்திரனை அறுவடைக் காலத்திலும் மறவாது நினைவு கூர்ந்து வழிபடும் சடங்கியல் மரபாகப் போகிக்குக் காப்புக் கட்டுகின்றனர். அவ்வகையில், காப்புக் கட்டுதல் எனும் வளமைச் சடங்கு, போகி என்னும் இந்திர மழைத் தெய்வத்தை வணங்கிடும் நோக்கத்தையே புலப்படுத்துகிறது.

    கன்னிப் பிள்ளை, கண்ணுப் பூளை, கூழைப்பூ, கூரைப்பூ எனப்படும் புல்செடியானது, பூக்கும்போது புல் தண்டில் வெண்ணிறத்திலான மழைத் துளிகள் கோத்தது போலவும் வழிவது போலவுமான தோற்றத்தைக் கொண்டதாகும். மழைக் காலத்தில் மட்டுமே தளைக்கும் இம்மழைப்பூவைத்தான் பொங்கல் காப்புக் கட்டுக்கான பூவாகக் கருதி இருக்கின்றனர் முன்னோர்.

    எத்தனையோ பூக்கள் இருக்கையில், இந்தப் பூவை மட்டும் காப்புக் கட்டுதலில் முதன்மைப் பூவாகக் கருதியதன் பின்புலமும் குறியீட்டுத் தன்மை வாய்ந்ததாகும். ஆயிரம் கண்ணுடையான் என்னும் இந்திரனைக் குறிக்கும் அடையாளத்துடன் இருக்கும் இந்தப் பூதான், கண் + பூ + இலை = கண்ணுப் பூவிலை - கண்ணுப் பூளை என்றாகியிருக்கிறது.

    ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனை - போகியைக் குறியீடாகக் குறிக்கும் நோக்கத்தில்தான் பொங்கல் காப்புக் கட்டுதலில் கண்ணுப் பூவிலை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பூவுடன் மாவிலை, ஆவாரம், வேப்பிலை, தும்பை போன்றவையும் சேர்த்து வீடுகளின் முகப்புகளிலும், காடு கழனிகளின் சனி மூலைகளிலும், கண்மாய், குளத்தங்கரை அய்யனார் கோவில்களிலும், குல சாமிகளாக வழிபடப்படும் முன்னோர் நடுகற்கள் அல்லது கோயில்களிலும் காப்புக் கட்டுவது வளமைச் சடங்கின் அங்கமாகவே இன்னும் இருந்து வருகிறது.

    பெரும்பாலும், போகி நாளின் மாலையிலும், தை நாள் பொழுது விடிவதற்கு முந்திய வைகறைப் பொழுதிலும் காப்புக் கட்டி விடுதல் மரபாகும். இத்தகைய மழைக் காப்புக் கட்டுதல் போகி என்னும் இந்திரனை - மழைத் தெய்வத்தை வணங்கியும் நினைவு கூர்ந்தும் நன்றிப் பெருக்கைக் காட்டியும் பொங்கல் சார்ந்த வளமைச் சடங்குகளை உழவு மரபினர் நிகழ்த்தி வந்திருக்கின்றனர்.

    மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து...

    ×